புதுச்சேரியில் கள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அதிலும் குறிப்பாக மார்க்கெட் மற்றும் முக்கிய சந்திப்புகளில் நூதன முறையில் கள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் காவல்துறையினருக்கு வந்துள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி சீட்டுகளை விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து அரியாங்குப்பம் பகுதியில் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.அப்போது அரியாங்குப்பம் நகர பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே கள்ள லாட்டரி சீட்டுகள் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் அருகே உள்ள காக்காயந்தோப்பு பகுதியை சேர்ந்த மாமன் மொய்தீன், அவரது சகோதரர் காஜா மொய்தீன் என தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்த போது, அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி திலாஸ்பேட்டை அருகே காந்திதிருநல்லூரை சேர்ந்த லிங்கேஷ் (எ) லிங்கேஸ்வரன் மற்றும் சாரம் பாலாஜி நகரை சேர்ந்த ராமராஜன் ஆகிய மேலும் 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தடை செய்யப்பட்ட 3 எண் கொண்ட கள்ள லாட்டரி சீட்டுகளை நூதன முறையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து 4 பேர் மீதும் துணை ஆய்வாளர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 செல்போன்கள், 1 லேப்டாப், ரசீதுகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 4 பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.