குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமானது.
இந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலால் 6 காவலர்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்தனர். இருப்பினும் மாணவர்கள் அங்கு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாமியா பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், "பல்கலைக்கழகத்தில் ஏராளமான சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன, இவை அனைத்தும் எவ்வாறு ஈடுசெய்யப்படும்? உணர்வு ரீதியிலும் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறை நுழைத்ததற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வோம். நீங்கள் சேதமடைந்த சொத்தை மீண்டும் உருவாக்கித் தர முடியும். ஆனால் மாணவர்கள் கடந்து வந்த இந்த மோசமான விஷயங்களுக்கு நீங்கள் ஈடுசெய்ய முடியாது. இந்த விவகாரத்தில் உயர் மட்ட விசாரணையை நாங்கள் கோருகிறோம்" என தெரிவித்துள்ளார்.