இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது. பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும். வாரத்திற்கு 30 விமானங்கள் இயக்கப்படும்; இதில் தலா 15 இந்திய மற்றும் பிரிட்டன் விமானங்கள் இயக்கப்படும். இந்த விமான சேவை அட்டவணை ஜனவரி 23-ஆம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும்" என தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், 'வரும் ஜனவரி 8-ஆம் முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கரோனா பரிசோதனைச் சான்று கட்டாயம். உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள். உரிய சோதனைக்குப் பிறகே விமானத்தில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள், இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்கள் என அனைத்தும் சென்னை, டெல்லி, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் தரையிறங்கவும், புறப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா இல்லை என்று ஆர்.டி-பி.சி.ஆர். (RT-PCR) பரிசோதனைச் சான்றிதழை விமானத்தில் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக www.newdelhiairport.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure) ஜனவரி 30-ஆம் தேதி இரவு (11.59 PM) வரை பின்பற்றப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 7-ஆம் தேதி வரை பிரிட்டன் - இந்தியா இடையே விமான போக்குவரத்து ரத்து என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.