
அரசு காப்பகத்தில் சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது தொடர்பாகக் கருத்து கூறியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் உ.பி அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார் பிரியங்கா காந்தி.
கான்பூரின் ஸ்வரூப் நகரில் உள்ள அரசு காப்பகம் ஒன்றில் அண்மையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அந்தக் காப்பகத்தில் உள்ள 57 சிறுமிகளுக்குக் கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதோடு, அந்தக் காப்பகத்தில் உள்ள ஐந்து சிறுமிகள் கருவுற்றிருப்பதும், ஒரு சிறுமிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும், கரோனா பாதிக்கப்படாத இரண்டு சிறுமிகளும் கருவுற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தச் சிறுமிகள் காப்பகத்திற்கு வருவதற்கு முன்னரே கருவுற்றிருந்ததாக மாஜிஸ்ட்ரேட் தெரிவித்தார்.
இதனைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்த பிரியங்கா காந்தி, இந்த விசாரணையில் உண்மைகள் மறைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனைத்தொடர்ந்து தவறான கருத்து வெளியிட்டது தொடர்பாகப் பிரியங்கா காந்தி பதிலளிக்க வேண்டும் என அம்மாநில சிறுவர்கள் உரிமைகள் அமைப்பு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்குப் பதிலடி தரும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், "அவர்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். நான் எப்போதும் உண்மைகளையே பேசுவேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி, பெயர் அறிவிக்கப்படாத பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் அல்ல. மக்கள் சேவகராக என் கடமை உ.பி. மக்களுக்கானதே ஆகும். அவர்கள் முன்னால் உண்மையை வைப்பதுதான் என் கடமையே தவிர அரசின் பிரச்சாரத்தைச் சுமந்து செல்வதல்ல. உ.பி. அரசு தன் பல்வேறு துறைகள் மூலம் என்னை மிரட்டுவதன் மூலம் கால விரயம்தான் செய்து கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.