இந்திய ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீல நிறமும், வெள்ளை நிறமும் இருக்கும் வகையில் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்தில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.
இதனை தொடர்ந்து, வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து, வந்தே மெட்ரோ ரயில் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் - புஜ் வழித்தடத்தில் பிரதமர் மோடி இன்று (16-09-24) தொடங்கி வைக்கிறார். புஜ்ஜில் இருந்து காலை 5:45 மணிக்கு புறப்படும் வந்தே மெட்ரோ காலை 10:50க்கு அகமதாபாத் சந்திப்பை சென்றடையும்.
இந்த ரயில் சேவையானது முற்றிலும் முன்பதிவில்லாத குளிர்சாதன வசதிகொண்ட ரயில் ஆகும். முன்பதிவில்லா வந்தே மெட்ரோ ரயில் சேவைக்கான டிக்கெட்டுகளை பயணத்துக்கு சற்று முன்பே பெற முடியும். 1,150 பயணிகள் அமரும் வசதிகொண்ட இந்த ரயில், மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும். மேலும், இந்த ரயில் 360 கி.மீ தொலைவை 5 மணி நேரம் 45 நிமிஷங்களில் சென்றடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் சேவையில், விபத்துக்களை தடுக்கும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான ‘கவச்’ உள்பட அதிநவீன அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.