Skip to main content

“தீர்ப்பில் சட்டப் பிழைகள் உள்ளன..” - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

congress spokesperson abhishek singhvi talks about rahul gandhi appeal case judgement

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

 

மேலும் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து கடந்த 3 ஆம் தேதி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், சிறைத் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் நேற்று (20.04.2023) தீர்ப்பு வெளியானது. அதில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து  நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பேசுகையில், "ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்த நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறானது. மோடி என்ற பெயர் கொண்ட 13 கோடி பேருடன் சேர்ந்து பிரதமர் மோடியும் குடும்பப் பெயரால் அவதூறாக இழிவுபடுத்தி உள்ளனர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பிரதமரின் மதிப்பையும் குலைத்திருக்கிறது. ஏனெனில் பிரதமர் புகார்தாரர் இல்லை என்பதை நீதிபதி மறந்துவிட்டார்.

 

மேலும் இந்த தீர்ப்பில் சட்டப் பிழைகள் உள்ளன. விரைவில் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். அப்போது இந்த இரண்டு தீர்ப்புகளிலும் உள்ள சட்டப் பிழைகள் சரி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உத்தரவால் ராகுல் காந்தியின் குரலை மௌனமாக்கி விடலாம் என்று பாஜக நினைக்க வேண்டாம். மோடி முதல் பாஜகவின் அடிமட்ட தொண்டர்கள் வரையிலும் ஒரு வித பயந்த மனநோயில் சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் ராகுல் காந்தி அவதூறாக எதுவும் பேசவில்லை. மக்கள் நீதிமன்றத்தில் ராகுல் தொடர்ந்து அச்சமின்றி பேசுவார்" என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்