நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. கூட்டணி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநில மாநிலங்களில் அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்த நிலையில், நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. கூட்டணி பதிவு செய்துள்ள வெற்றியால், குடியரசுத்தலைவர் தேர்தலில் அக்கூட்டணி வேட்பாளர் எளிதாக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசுத்தலைவரை நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களும், மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து தேர்ந்தெடுக்கின்றனர்.
மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும் மதிப்பிடப்படுகின்றன. இதன்படி, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 83,824 ஆகும். தற்போது பா.ஜ.க. மட்டுமே 255 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வென்றுள்ளதால், வரவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தல் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
இதேபோல், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றியும், அக்கட்சிக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையில் ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணிக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், வரவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளர் எளிதில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.