இரண்டு நாட்களாக அரசியல் சாசனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பல்வேறு உறுப்பினர்கள் உரையாற்றினார். அரசியல் சாசனம் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் தற்போது மோடி உரையாற்றி வருகிறார். அவரது பதிலுரையில், ''இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்தது. அதன் அடிப்படையாகக் கொண்டு நாம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
ஜனநாயகத்தின் திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 75 ஆண்டுகால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, மிகவும் அரிதான நிகழ்வு. ஜனநாயகத்தின் தாய் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் நாம் கொண்டாட வேண்டிய நேரம் இது. காலங்களைக் கடந்து இந்திய அரசியல் சாசனத்தின் வலிமை நிற்கிறது. அரசியல் சாசனத்தை வடிவமைத்ததில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்தியாவில் தான் சுதந்திரம் பெற்றஉடனே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இன்றும் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களிலும் மையமாக பெண்கள் இருக்கின்றனர். குடியரசுத் தலைவரே பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் தான். கல்வி, வேலை வாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. காலனி ஆதிக்க மனநிலையில் காங்கிரஸ் இருந்து வருகிறது.
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமை என்பது மிகவும் அவசியமானது. 100 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுத்திருக்கும். விரைவில் உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்' என்றார்.