ஒரு துறையில், உயர் பதவியில் இருக்கும் மகளுக்கோ அல்லது மகனுக்கோ, அதே துறையில் சாதாரண நிலையில் இருக்கும் தந்தை வணக்கம் செலுத்துவதை சினிமாவிலும், விளம்பரத்திலும் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் உண்மையாகவே நடந்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி, 2018-ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிபெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாகப் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பிரசாந்தி வருகை தந்தார். அப்போது அங்கிருந்த ஷியாம் சுந்தர், தன் துறையில் தன்னை விட உயர் பொறுப்பில் இருக்கும் தனது மகளுக்கு சல்யூட் அடித்தார்.
காவல்துறை அதிகாரி, தன் மகளுக்கு சல்யூட் அடித்தது, காண்போரை நெகிழச் செய்தது. மேலும், இந்தச் சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக பிரசாந்தி, தனது தந்தைதான் தனக்கு ரோல்மாடல் எனவும், அவர் தனக்கு சல்யூட் அடித்தபோது தர்மசங்கடமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.