மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், மணிப்பூரின் ஜிரிபம் என்ற பகுதிக்குச் செல்லவிருந்த நேரத்தில் அவர் பயணித்த கான்வாய் வாகனத்தின் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மற்றும் வீரர் என இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் குக்கி இன போராளிகள் மணிப்பூர் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 53-இல் பிரேன் சிங்கின் கான்வாய் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நான்கு போராளி அமைப்பினர் முதலமைச்சரின் மீது தாக்குதல் நடத்துவதற்காக முயன்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் அருகிலிருந்த பாதுகாப்பு வீரர்கள் இருவர் காயமடைந்திருக்கின்றனர். இதில் பாதுகாப்பு வீரர்கள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நல்வாய்ப்பாக மணிப்பூர் முதல்வர் தாக்குதலில் இருந்து தப்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணிப்பூரின் ஜிரிபாமில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து இம்பாலில் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் கூறுகையில், “இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் கடும் கண்டனத்திற்குரியது. இது முதல்வர் மீதான நேரடி தாக்குதல். அதாவது இந்தத் தாக்குதல் நேரடியாக மாநில மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு இது தொடர்பாக ஏதாவது நடவடிக்கை வேண்டும். எனவே அந்த நடவடிக்கையை நான் எடுப்பேன். எனது சகாக்கள் அனைவரையும் அழைத்து நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசுகையில், “மணிப்பூர் மற்றும் நாட்டிற்காக இரவு பகலாக பணியாற்றி வரும் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தச் சம்பவத்தில் காயமடைந்து ஷிஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். ஜிரிபாம் செல்லும் வழியில் ஆயுதமேந்திய குற்றவாளிகள் பதுங்கியிருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.