தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்திற்கு, இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் பழனிசாமி, ரஜினிகாந்தின் நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ரஜினியை ‘தலைவா’ என புகழ்ந்துள்ளார். மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பல தலைமுறைகளிடையே பிரபலம், சிலரால் மட்டுமே பெருமையாக சொல்லிக்கொள்ளக்கூடிய பணிகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள், அன்பான ஆளுமை அதுதான் ரஜினிகாந்த். தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அவருக்கு எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.