அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகுதி நீக்கம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “பிரதமர் மோடி - அதானி இடையேயான தொடர்புகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன். என்னை தகுதி நீக்கம் செய்தாலும், கைது செய்தாலும் உண்மை பேசுவதைத் தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற செயலகம், ராகுல் தனது அரசு பங்களாவை காலி செய்யச் சொல்லி அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதற்கு ராகுல் காந்தி, விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன் என்று சொல்லி அரசு பங்களாவை காலி செய்வதாக நாடாளுமன்ற செயலருக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றம் தொடங்கியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை வலியுறுத்தியும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முதலில் பகல் 12 மணி வரை நாடாளுமன்றம் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தள்ளி வைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.