Skip to main content

அடுத்த அப்டேட் கொடுத்த ஆதித்யா எல் - 1 விண்கலம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
The next update was the Aditya L-1 spacecraft

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.

இந்நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கியில் எடுத்த புகைப்படங்கள் முதல் முறையாக இஸ்ரோ சார்பில் அதிகாரப்பூர்வமான வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சூரியனைச் சுற்றியுள்ள குரோமோச்பியர் மண்டலத்தை வெவ்வேறு அலைநீளத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பிய படத்தை இஸ்ரோ கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவு எலக்ட்ரான் முடுக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா’ - தமிழக அரசு அறிவிப்பு!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Space Park in Kulasekaranpattinam' - Tamil Nadu Government Announcement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ரூ. 950 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது விண்வெளி நிலையத்தை நிறுவுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் விண்வெளி குறித்த ஆய்வு திறன்களை மேம்படுத்துவதையும் செயற்கைக்கோள் ஏவுதலை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO - டிட்கோ) விண்வெளி தொடர்பான முயற்சிகளில் மாநிலத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் இஸ்ரோவின் துணை நிறுவனமான இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU - எம்.ஓ.யு.) கையெழுத்திட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து டிட்கோ சார்பில் தெரிவிக்கையில், “இந்த முயற்சியானது விண்வெளித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு என்ற சமீபத்திய அறிவிப்பை சாத்தியப்படுத்தியுள்ளது. இது உலக முதலீட்டாளர்களை குறிப்பாக தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி துறையில் பங்கேற்க வைக்கும் முயற்சி ஆகும். இந்த பூங்கா விண்வெளி ஆராய்ச்சி, அதன் மேம்பாடு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான மையமாக செயல்படும். இது உலகளாவிய விண்வெளி அரங்கில் தமிழகத்தின் நிலையை மேம்படுத்தும். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய விண்வெளி தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து இந்தியாவின் ஆற்றல்மிக்க மற்றும் முக்கிய மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது!

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
Kathari Veil starts today

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் கோடை காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுவதால் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளிட்ட வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அத்தோடு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் நேற்று (03.05.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். தருமபுரி, திருத்தணி மற்றும் திருப்பத்தூர் உட்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். இன்று (அதாவது 3 ஆம் தேதி) முதல் 6 ஆம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று (04.05.2024) முதல் கத்தரி வெயில் தொடங்குகிறது. வரும் 28 ஆம் தேதி வரை என 25 நாட்களுக்கு இந்த கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. அதே சமயம் கத்தரி வெயில் காலத்தின் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.