நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு தினத்தையொட்டி, வீரமரணமடைந்தவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2001- ஆம் ஆண்டு டிசம்பர் 13- ஆம் தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அஃப்சல் குரு கடந்த 2013- ஆம் ஆண்டு பிப்ரவரி 9- ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு தினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரமரணமடைந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், '2001ல் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட கோழைத்தமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது. நாடாளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. இந்தியா எப்போதும் அவர்களுக்கு நன்றி செலுத்தும்' என குறிப்பிட்டுள்ளார்.