பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர். அதற்காக இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானை கைது செய்யப்பட்டு, 2 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்தும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதியில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானின் கங்கா நகர் பகுதியில் எல்லை தாண்டி ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. பிப்.26இல் பாகிஸ்தான் மீதான விமானப்படை தாக்குதலுக்குப் பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3வது உளவு விமானம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.