டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கி 4 கி.மீ தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியைச் சேர்ந்தவர் கவுசல் யாதவ். இவர் டெல்லியில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்தார். புத்தாண்டு அன்று உணவு டெலிவரி செய்யச் சென்ற கவுசல் யாதவ் மீது கார் ஒன்று மோதியுள்ளது. விபத்தினால் காரின் சக்கரத்தில் கவுசல் யாதவ் மாட்டிக்கொண்டார். ஆனால் இதை அறியாத கார் ஓட்டுநர் இதிலிருந்து தப்ப நிற்காமல் புறப்பட்டார். இதனால் 1 கி.மீ தூரம் வரை கவுசல் யாதவ் இழுத்துச் செல்லப்பட்டார்.
அதன் பின் கார் ஓரிடத்தில் நிற்க சக்கரத்தில் சிக்கிய கவுசல் யாதவ் தடுமாறி வெளியில் வந்தார். இதன் பின்பும் கார் ஓட்டுநர் அவரைக் காப்பாற்றாமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கவுசலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கவுசலை பரிசோதித்த மருத்துவர்கள் கவுசல் இறந்துவிட்டார் எனக் கூற, உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் பின் சிசிடிவி காட்சிகளில் பதிவானதை வைத்து தப்பி ஓடிய கார் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அஞ்சலி சிங் இறந்த ஒரு வாரத்திற்குள் அதே முறையில் மேலும் ஒரு இளைஞர் இறந்திருப்பது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.