ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தென் கிழக்கு ரயில்வே பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் எண். 12841 ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண். 12864 சர் எம் விஸ்வேஸ்வரய்யா - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 02.06.2023 அன்று சுமார் 18.55 மணி அளவில் பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.
இதுவரை கிடைத்த தகவலின் படி 261 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரயில்வே அமைச்சர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.
ரயில்வே வாரியத்தின் தலைவர், கட்டாக் மருத்துவமனையிலும் ரயில்வே வாரியத்தின் டிஜி பாலசோர் மருத்துவமனையிலும் காயமடைந்த பயணிகளின் சிகிச்சையை கண்காணித்து வருகின்றனர். முதன்மை தலைமை மருத்துவ இயக்குநர் மற்றும் பொது மேலாளர் மற்ற மருத்துவமனைகளில் காயமடைந்த பயணிகளை கவனித்து வருகின்றனர். உறுப்பினர் உள்கட்டமைப்பு, ரயில்வே வாரியம் தடம் புரண்ட இடத்தில் உள்ளது மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.