நாட்டில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகளவு புல்டோசர் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை உடனுக்குடன் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இது தொடர்பான பல்வேறு வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டவர்களின் கட்டிடங்கள் உள்பட எந்த கட்டிடத்தையும் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி இடிக்கக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகும், குஜராத் மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் கட்டிடங்களை இடித்துவிட்டதாக சும்மஸ்த் பத்னி முஸ்லீம் ஜனாத் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.ஆர்.காவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, “எங்களது உத்தரவைக் குஜராத் அதிகாரிகள் அவமதித்ததாகத் தெரிய வந்தால் அவர்களை சிறைக்கு அனுப்புவது மட்டுமல்லாமல் இடித்த கட்டிடங்களை மீண்டும் கட்டித்தரச் சொல்வோம்” என்று கருத்து தெரிவித்தனர். இதுதொடர்பான பதிமனுவை தாக்கல் செய்த உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 16 ஆம் தேதிக்கு உத்தரவிட்டனர்.