Skip to main content

“நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் தயார்” - காங்கிரஸ் எம்.பி.

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

No-confidence resolution notice ready Congress M.P.

 

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து நான்காம் நாளான நேற்று வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

 

இதையடுத்து நேற்று நாடாளுமன்றத்தின் மேலவை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் இந்தியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மக்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி எம்.பி., ‘நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் தயாராக இருக்கிறது. இந்த நோட்டீஸ் நாளை (26.07.2023) காலை 10 மணிக்கு முன்பாகவே மக்களவை செயலகத்திற்கு வந்து சேரும்’ எனத் தெரிவித்தார்.

 

முன்னதாகப் பிரதமர் மோடி தலைமையில், பாஜகவின் ஆட்சிமன்றக் குழு நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்பாக வியூகங்கள் வகுப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா எனும் பெயரை மோடி மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, “ஆட்சி செய்ய விரும்புபவர்கள், நாட்டை உடைத்த கிழக்கு இந்தியக் கம்பெனி, இந்தியன் முஜாய்தீன் உள்ளிட்டவற்றில் உள்ள பெயரைக் கொண்டுள்ளனர். மக்கள் ஒரு போதும் தவறாக வழிநடத்தப்படமாட்டார்கள்” என்று தெரிவித்ததாக ரமேஷ் பிதுரி எம்.பி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்