கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக்கொள்வதே ஒரே வழி என கருதப்படும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவிற்கு தடுப்பூசியைத் தயாரிக்க முடியாமல், பாரத் பயோடெக் நிறுவனமும் சீரம் நிறுவனமும் திணறி வருகின்றன. இதனையடுத்து இந்தியாவில் மேலும் சில நிறுவனங்களுக்குத் தடுப்பூசி தயாரிக்கும் உரிமத்தை வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்தநிலையில், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நேற்று (18.05.2021) காணொளி வாயிலாக ஒரு நிகழ்வில் பேசியபோது, தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்குவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர், "விநியோகம் செய்யப்படும் தடுப்பூசிகளைவிட, தேவை அதிகமானதாக இருப்பது சிக்கலை உருவாக்குகிறது. ஒரு நிறுவனத்துக்குத் தடுப்பூசி தயாரிப்பு உரிமத்தை வழங்குவதற்குப் பதில், 10 நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். அந்த நிறுவனங்கள் தடுப்பூசியைத் தயாரித்து நாட்டிற்கு விநியோகிக்கட்டும். மீதமிருந்தால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதை 15 - 20 நாட்களில் செய்யலாம்" என கூறியுள்ளார்.
நிதின் கட்கரியின் ஆலோசனையைத் தொடர்ந்து இணையவாசிகள் அவரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மத்திய அமைச்சராக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவர், யாருக்கு ஆலோசனை வழங்குகிறார் என கேள்வியெழுப்பிவருகின்றனர்.