இங்கிலாந்தில் பரவி வந்த மரபணு மாற்றமடைந்த புதிய வகை கரோனா, மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்கள் சோதனை செய்யப்படுவதன் மூலம், இங்கும் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் ஏற்கனவே 73 பேருக்குப் புதியவகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 9 பேருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.
புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனி அறையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு விமான சேவை தொடங்கியுள்ளது. இன்று லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்த விமானத்தில் 256 பயணிகள் வந்துள்ளனர்.
இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள், ‘கரோனா இல்லை’ என்ற காரனோ தொற்று பரிசோதனை சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்திய விமானத்திற்கு பதிவு செய்யும் 72 மணி நேரத்திற்குள்ளாக அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், இந்தியா வந்த பிறகும் அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெறும் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.