குஜராத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, ஹிமாச்சல் பிரதேசத்திலும் பிரதமர் மோடி ஆம்புலன்சுக்கு வழிவிடும் வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாகியுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் வருகின்ற 12ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இறுதிக்கட்ட பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் பாஜக பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறது.
புதன்கிழமையன்று இமாச்சல் பிரதேச பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். இதனையடுத்து காங்ரா மாவட்டத்தில் உள்ள சாம்பி கிராமத்துக்கு வந்த மோடி பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பிரதமர் செல்லும் காரின் வழியே ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. இதனை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமரின் கான்வாய் வாகனத்தை சில நிமிடங்கள் நிறுத்திவிட்டு அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் பிரதமர் மோடியின் இச்செயலுக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அந்த ஆம்புலன்ஸ் கடந்து சென்ற பிறகு பிரதமரின் கான்வாய் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. ஆனால், இது முதன்முறை அல்ல கடந்த மாதம் பிரதமர் மோடி மேற்கொண்ட குஜராத் பயணத்திலும் இதேபோல் ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்காக பிரதமர் தனது வாகனத்தை நிறுத்தினார். இதைக் குறிப்பிட்டு பேசிய எதிர்க்கட்சியினர் “இந்த மாதிரி செயல்களை தேர்தல் யுக்திகளாகவே பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார்” என விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த இணையவாசிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.