பிரதமரின் கரோனா நிவாரண நிதி திட்டத்தினை பயன்படுத்தி போலியான யூ.பி.ஐ ஐடி மூலம் பண மோசடியில் ஈடுபட முயன்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 35,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், கரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியைத் தருமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிதியை அளிப்பதற்கான வங்கிக் கணக்கு விவரங்களும் வெளியிடப்பட்டன. இதனைப் பயன்படுத்தி டெல்லியைச் சேர்ந்த கும்பல் ஒன்று போலியான யூ.பி.ஐ ஐடி மூலம் பண மோசடியில் ஈடுபட முயன்றுள்ளது.
பிரதமர் நிவாரண நிதிக்குப் பணம் கொடுக்க உருவாக்கப்பட்ட pmcares@sbi என்ற யூ.பி.ஐ ஐடியில் இருந்து 'S' என்ற எழுத்தை மட்டும் நீக்கிவிட்டு pmcare@sbi என்ற போலி யூபிஐ ஐடியை உருவாக்கி உள்ளது இந்தக் குழு. அதன் பின்னர் அந்த ஐடியை சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரப்பி உள்ளது. இந்தப் போலி ஐடியை தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்த ஒருவர் ஸ்டேட் பேங்க், ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், டெல்லி போலீஸ் ஆகியோருக்கு இதனைத் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து உஷாரான டெல்லி காவல்துறை அந்த ஐடியை முடக்கியுள்ளனர். மேலும், இந்த நாடு சந்தித்துள்ள இந்த இக்கட்டான சூழலில், பிரதமரின் நிவாரண நிதி கணக்கை வைத்து மோசடியில் ஈடுபட்ட அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பும் மக்கள் சரியான வாங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.