Skip to main content

முல்லை பெரியாறு அணை விவகாரம்: எச்சரிக்கை விடுத்த பினராயி விஜயன்!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

pinarayi vijayan

 

கேரளாவில் அண்மையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து, அம்மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அதை செயல்பாட்டிலிருந்து அகற்றிவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் எனவும் கேரளாவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை வலியறுத்தி #decommission mullaperiyar என்ற ஹாஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்தனர்.

 

பிரித்விராஜ் உள்ளிட்ட சில மலையாள நடிகர்களும் சமூகவலைதளங்களில் முல்லை பெரியாறு அணையை செயல்பாட்டிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைக்குத் தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்தச் சூழலில் முல்லை பெரியாறு அணை ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய பினராயி விஜயன் கூறியுள்ளதாவது,

 

“முல்லை பெரியாறு அணை குறித்து தற்போதைக்கு எந்தக் கவலையும் இல்லை. சமூக வலைதளங்களில் ஒரு பிரிவினர், அணை ஆபத்தில் இருக்கிறது, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கப் போகிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவருகின்றனர். இதுபோன்ற பொய் பிரச்சாரங்களுக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

முல்லை பெரியாறு விவகாரத்தில் மாநில அரசு தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கேரளா புதிய அணையை விரும்புகிறது. ஆனால், இந்த நிலைப்பாட்டை மத்திய அரசு ஆதரிக்கவில்லை. இருந்தபோதிலும், புதிய அணைக்கான கோரிக்கையை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

 

பல்வேறு பிரச்சனைகளில் தமிழ்நாடு அரசு நம்முடன் ஒத்துழைத்துவருகிறது. இருப்பினும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. தமிழ்நாட்டுடன் பேசி அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்போம்.”

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்