குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஆற்றில் மூழ்கிய பலரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விபத்தில் இருந்து தப்பிய நபர் ஒருவர் கூறுகையில், “பாலத்தில் அதிக கூட்டம் இருந்தது. சிலர் வேண்டுமென்றே பாலத்தை ஆட்டத் துவங்கினர். இதற்கு மேல் செல்ல வேண்டாம் என நினைத்து நான் எனது குடும்பத்தை மீண்டும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டேன். அங்கு இருந்த ஊழியர்களிடமும் இது குறித்து தெரிவித்தேன். அவர்கள் கண்டுகொள்ளாமல் டிக்கெட்டை விற்பதில் தான் கவனத்தை செலுத்தினார்கள்” எனக் கூறினார்.
இச்சம்பவம் குறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் “நான் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் டீ விற்பேன். எல்லாம் ஓரிரு நொடிகளில் நிகழ்ந்து விட்டது. பாலத்தில் இருந்த மக்கள் தண்ணீரில் தவறி விழுந்ததைப் பார்த்தேன். நான் என்னால் முடிந்த உதவிகளை இரவு முதல் செய்து கொண்டு இருக்கிறேன். ஏழு மாத கர்ப்பிணி பெண் பாலம் உடைந்ததில் உயிரிழந்ததைக் கண்டதும் என் மனம் உடைந்துவிட்டது” எனக் கூறினார்.
இது குறித்து பெண் ஒருவர் கூறுகையில், “காலை வரை என்னால் இதை நம்ப முடியவில்லை. நானும் என் குடும்பத்தினரும் இரவு முழுவதும் மக்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதில் உதவிக்கொண்டு இருந்தோம். மக்களை அழைத்துச் செல்ல என் இரு வாகனங்களையும் கொடுத்துள்ளேன். உண்மையில் நான் நொறுங்கிப் போயுள்ளேன். இதற்கு மேல் என்னால் எதையும் பேச முடியாது” எனக் கூறினார்.
“விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 12 உறவினர்களை இழந்துவிட்டேன்” - பாஜக எம்.பி
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலம் உடைந்து ஆற்றில் விழும் அந்த சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டாவது நாளாக தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே பாலத்தை நிர்வகிக்கும் அமைப்பு மீது குஜராத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உள்நோக்கம் இன்றி மரணத்திற்குக் காரணமாக அமைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.