“காந்திஜி ஹோ சமஜ்னே கா சஹி சமய்” என்ற நூலை என்.சி.இ.ஆர்.டி தலைவர் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் அர்த்தம் காந்தியை புரிந்து கொள்ள சரியான சமயம் என்பதாகும். இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று புதுடெல்லியில் காந்தி ஸ்மிருதியில் நடைபெற்றது. அதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோஹன் பகவத் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “மகாத்மா காந்தி போராட்டங்களின் போது தவறாக ஏதாவது நடந்தால் அவர் தானே அதனைச் சரி செய்வார். இப்போதெல்லாம் போராட்டங்கள் தவறாகச் சென்றால், சட்டம் ஒழுங்கு சூழல் உருவானால் மக்கள் தடியடியையும் தோட்டாக்களையும் எதிர்கொள்கின்றனர். மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் அந்த போராட்டத்தை தூண்டியவர்கள் போராட்டம் வெற்றியா தோல்வியா என்றுதான் பார்க்கிறார்கள்.
மகாத்மா காந்தி தன் வாழ்க்கையில் ஒருபோதும் தான் இந்து என்று கூறிக்கொள்வதிலிருந்து விலகியதில்லை, சில வேளைகளில் தான் ஒரு சனாதன இந்து என்றே அவர் கூறிக் கொண்டார். கடவுளை பலவழிகளில் கும்பிடுவது பற்றி அவர் வேறுபாடுகள் கற்பிக்கவில்லை. எனவே அவர் தனது நம்பிக்கையையும், பிறர் நம்பிக்கைகளையும் மதித்தார்.
காந்தியின் இந்தியாவை அடையும் கனவு இப்போதைய இளைஞர்களிடம் உள்ளது. வளர்ச்சியும் அதன் கருத்தாக்கமும் மனிதார்த்த அடிப்படையில் கணக்கிடப்பட்டு வரிசையில் கடைசியில் இருக்கும் மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். காந்திஜி இந்தியாவை இந்தியப் பார்வையிலிருந்தே பார்த்தார். மகாத்மா காந்தியின் இந்தியா பற்றிய பார்வைக்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் பார்வைக்கும் ஒற்றுமைகள் உள்ளன” என்றார்.