கரோனா வைரஸ் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் எனப் பிரதமர் மோடி மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மக்களுக்குக் கோரிக்கை ஒன்றைத் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் முன்வைத்துள்ளார் பிரதமர் மோடி.
இதுகுறித்த அவரது பதிவில், "கோவிட்-19 கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அரசு முழுமையான விழிப்புடன் உள்ளது. மக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. விசா வழங்குவதை நிறுத்துவது முதல் சுகாதார நடவடிக்கைகளை அதிகரிப்பது வரை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பயத்திற்கு நோ சொல்லுங்கள், பாதுகாப்பிற்கு யெஸ் சொல்லுங்கள். மத்திய அரசின் எந்த அமைச்சரும் எதிர்வரும் நாட்களில் வெளிநாடு செல்லமாட்டார்கள். அதேபோல நம் நாட்டு மக்களும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் நோய் பரவல் சங்கிலியை நம்மால் உடைக்க முடியும். பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் அனைவரின் பாதுகாப்பையும் நம்மால் உறுதிப்படுத்த முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.