![india](http://image.nakkheeran.in/cdn/farfuture/h3MzNA-gqKL_irYgrxZ1hsL6mRWYzAXFuw-1fjHxWMs/1630149383/sites/default/files/inline-images/adwdf.jpg)
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதன் காரணமாக இந்தியாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உளவுத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு காபூலில் தாக்குதல் நடத்திய ஐஎஸ்- கோராசான் அமைப்பின் திட்டங்களுள் இந்தியாவில் கலீபா ஆட்சியை (இஸ்லாமிய தலைமையின் கீழான ஆட்சி) நிறுவுவதும் ஒன்று என இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஐஎஸ்- கோராசான் அமைப்பு, தங்களது ஜிஹாத்தை முதலில் மத்திய ஆசியாவரை கொண்டு செல்லவும், பின்னர் இந்தியாவிற்கு கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள உளவுத்துறை வட்டாரங்கள், ஜிஹாத்திற்காக இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதையும், இயக்கத்திற்கு ஆட்களை சேர்ப்பதையும் அந்த அமைப்புமுக்கிய நோக்கங்களாக கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளன.
இதுமட்டுமின்றி பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது, தனது தலைமையகத்தை ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்திற்கு மாற்றியுள்ளதாகவும், அதேபோல் 2008 மும்பைக் தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குனாருக்கு மாற்றப்படுவதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மசூத் அசார், தலிபான் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதர் உள்ளிட்ட தலிபான் இயக்கத் தலைவர்களை சந்தித்து, ஜம்மு காஷ்மீரில் தங்களது நடவடிக்கைகளுக்கு உதவி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.