ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இது பற்றி நேற்று பேசியிருந்த பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நமது வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்துவிட கூடாது, என பேசியிருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று பொது மக்களிடையே பேசிய மோடி, 'காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் மிக மோசமான ஒரு செயலை செய்து விட்டார்கள். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 2 வீரர்களும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மக்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தள்ளனர். இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் கண்டிப்பாக வீண் போகாது. அவர்கள் எங்கு பதுங்கினாலும் இனி தப்பிக்க முடியாது. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளோம். தீவிரவாதிகளின் தலைவிதியை இனி நமது ராணுவ வீரர்கள்தான் முடிவு செய்வார்கள். அவர்கள் இனி தப்பித்து எங்கும் செல்ல முடியாது' என கூறினார்.