
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், சில தினங்களுக்கு முன்பு கணவனை 15 துண்டுகளாக வெட்டி டிரம்மில் அடைத்து வைத்து தனது ஆண் நண்பருடன் உல்லாசப் பயணம் சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. வணிக கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சவுரப் ராஜ்புட்டின் மனைவியான முஸ்கானுக்கும் சாஹில் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம், சவுரப்புக்கு தெரியவர, தனது மனைவி முஸ்கானை கண்டித்துள்ளார்.
இதனால், தனது ஆண் நண்பர் சாஹிலோடு சேர்ந்து கணவன் சவுரப்பை கொலை செய்ய முஸ்கான் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவில் பணியாற்றி வந்த சவுரப் ராஜ்புட், தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கடந்த மார்ச் 4ஆம் தேதி இந்தியாவுக்கு வந்துள்ளார். அங்கு வந்த சவுரப்புக்கு கொடுத்த உணவில் தூக்கி மாத்திரை கலந்து கொடுத்து அவரை மயக்கமடைய செய்ய வைத்து முஸ்கானும், சாஹிலும் சேர்ந்து கூர்மையான ஆயுதத்தை கொண்டு சவுரப்பை 15 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

அதன் பின்னர், அந்த உடல் பாகங்களை வீட்டில் உள்ள டிரம்மில் போட்டு சிமெண்ட் கலவையை கொட்டி மூடியுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்தி வரும் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டே இருக்கிறது. அதே சமயம், இந்த வழக்கு இணையத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. நீல டிரம்ஸின் பயன்பாட்டை கேலி செய்யும் மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் டிரம் வாங்கவேண்டுமென்றால் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீரட்டில் நீல நிற டிரம்மிற்குள் உடல் அடைக்கப்பட்டு சிமெண்டால் அடைத்து வைக்கப்பட்ட சவுரப் ராஜ்புத்தின் கொலை சம்பவத்தால், சில்லறை வணிகர்களின் வணிகத்தையே தலைகீழாக மாற்றியுள்ளது. இதனால், வணிகர்கள் புதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதில், நீல நிற டிரம்களை வாங்க வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்குமாறு வணிகர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், யாராவது நீல நிற டிரம் வாங்க விரும்பினால் அவர்களுக்கு எதனால் அது தேவைப்படுகிறது போன்ற கேள்விகளை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் தவறாமல் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஒருபடி மேலாக, நீல நிற டிரம்களை பொதுவாகப் பயன்படுத்தும் ஜூஸ் விற்பனையாளர்களும் தற்போது வெள்ளை நிற டிரம்களாக மாற்றி வருகின்றனர்.