பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்தநிலையில், இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தஜிகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது.
இதற்கிடையே இந்த உச்சி மாநாட்டிற்கு மத்தியில், சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் எல்லை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது எல்லைப்பகுதியிலிருந்து படைகளை விலக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அமைதியை மீட்டெடுப்பதற்கு இந்த விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படுவது அவசியம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. இது இரு தரப்பு உறவின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.