
மேற்குவங்க மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. மரணம் அரசியல் கொலை அல்ல என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்குவங்கம் மாநிலம் ஹெமதாபாத்தைச் சேர்ந்தவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ரே. இவர் தனது வீட்டின் அருகில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த திங்கள்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் சில நபர்கள் வீட்டிற்கு வந்த தேபேந்திர நாத்தை வெளியே அழைத்துச் சென்றதாக அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.
எனவே, தேபேந்திர நாத் தற்கொலை செய்யவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இந்தக் கொலைக்கு மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சியே காரணம் எனவும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை இவேண்டும் எனவும் பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. சி.பி.ஐ. விசாரணைகோரி பா.ஜ.க.-வினர் மேற்கொண்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து அம்மாநில பா.ஜ.க.-வினர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரைச் சந்தித்து இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தினார்.
இந்நிலையில் மம்தாபானர்ஜி ஜனாதிபதிக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் முதல் கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தான் எம்.எல்.ஏ. தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது. அவரது சட்டைப் பையில் இருந்த கடிதத்தில் இதனை அவரே குறிப்பிட்டுள்ளார். தனது சாவுக்கு இரண்டு பேர் தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே பா.ஜ.க.வினர் கூறுவதுபோல இது அரசியல் கொலை இல்லை’ என்று கூறியுள்ளார்.