Congress-BJP poster clash in social media

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

Advertisment

அதே நேரத்தில், இந்த 5 மாநில சட்டமன்றத்தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரத்தை இரு கட்சிகளான காங்கிரஸூம்பா.ஜ.க.வும் இப்பொழுதே தொடங்கிவிட்டன. இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி வசைபாடி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, சமூக வலைத்தளங்களிலும் போஸ்டர்களை உருவாக்கி வசைபாடி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை போஸ்டராக வெளியிட்டு அதில், ‘மிகப்பெரிய பொய்யர்’ என்று குறிப்பிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து மற்ற ஒரு போஸ்டரில், ‘ஜூம்லா பாய்’ என்றும்‘விரைவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பார்க்கலாம்’ என்றும் கூறியிருந்தது.

Advertisment

இதற்குப் பதில் தரும் விதமாக பா.ஜ.க தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படத்தை 10 தலைகளாக சித்தரித்து நவீன கால ராவணன் என்று வெளியிட்டிருந்தது. மேலும் அதில், ‘இந்தியாவுக்கு ஆபத்து - காங்கிரஸ் கட்சி தயாரிப்பு. இயக்கம் ஜார்ஜ் சோரோஸ். புதிய யுக ராவணனாக வந்துள்ளார். அவர் தீயவன். தர்ம எதிர்ப்பு. ராமர் எதிர்ப்பு. பாரதத்தை அழிப்பதே அவரது நோக்கம்’ என்று கூறியிருந்தது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்குஇடையே நடக்கும்இந்த போஸ்டர் மோதல் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.