இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில் இன்றிலிருந்து (17.03.2021) 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூரில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களோடு இன்று ஆலோசிக்கவுள்ளார். இந்தநிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதால், பிரதமருடனான ஆலோசனையில் மம்தா கலந்துகொள்ளமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரத்தில் இருப்பதால், பிரதமருடனான ஆலோசனையில் அவர் பங்கேற்கமாட்டார் எனவும், அவருக்குப் பதிலாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பங்கேற்பார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.