மேற்குவங்கத்தில் வரும் 27 ஆம் தேதி தொடங்கி, எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார்கள். இதனால் அம்மாநில அரசியலில் அனல் வீசுகிறது.
முதல்வர் மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதியில் களமிறங்குகிறார். அப்பகுதியில், செல்வாக்கு மிகுந்த தனது கட்சியின் முன்னாள் அமைச்சரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இதனையொட்டி மம்தா பானர்ஜி அத்தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதோடு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்த மம்தா பானர்ஜியின் சொத்து குறித்த தகவல்கள் வெளியாகிவுள்ளது.
2019- 2020 ஆண்டில் 10 லட்சத்து 34 ஆயிரத்து 370 ரூபாய் சம்பாதித்ததாக பிரமாணப் பத்திரத்தில் மம்தா கூறியுள்ளார். கையில் ரொக்கமாக 69 ஆயிரத்து 255 ரூபாய் இருப்பதாகவும், வங்கிக் கணக்குகளில் 13.53 லட்சம் இருப்பதாகவும், தேசிய சேமிப்பு பத்திரங்களில் 18 ஆயிரத்து 490 ரூபாய் முதலீடு இருப்பதாகவும் மம்தா அதில் தெரிவித்துள்ளார். மேலும், 43 ஆயிரத்து 837 ரூபாய் மதிப்புள்ள 9 கிராம் தங்கம் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ள மம்தா, அனைத்தையும் சேர்த்து தனது அசையும் சொத்துகளின் மதிப்பு 16.72 லட்சம் எனக் கூறியுள்ளார். தனக்குச் சொந்தமாக கார், வீடு ஆகியவை இல்லையென்றும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.