ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அந்தக் கூட்டத்தைப் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் புறக்கணித்துள்ளனர்.

இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசிக்க கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் மாநில சட்டமன்ற, மக்களவை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே எடுத்துள்ள நிலையில் அதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து இன்று நடைபெறும் கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா, கேஜ்ரிவால், மாயாவதி ஆகியோர் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்ளும் நிலையில் மம்தா, கேஜ்ரிவால், மாயாவதி ஆகியோர் புறக்கணித்திருப்பது கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது.