இந்தியாவில் கரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் ஒரு அமைச்சர் உட்பட 778 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், நாட்டின் ஒருசில பகுதிகளில் மக்களின் அறியாமையால் தினமும் நூற்றுக்கணக்கான நபர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் இந்தியாவைப் பொறுத்தவரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மஹாராஷ்ட்ரா.
நேற்று ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 778 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000- ஐ கடந்துள்ளது. இந்நிலையில், நேற்று கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களில், அம்மாநில அமைச்சரும் ஒருவர் ஆவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவாத், கடந்த ஒருவாரமாக வீட்டில் தனிமையிலிருந்த நிலையில், நேற்று அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த அமைச்சர் அவாத், அண்மையில் காவல்துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு காவலர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், கடந்த ஒருவாரமாக வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் அவாத். இந்நிலையில் அவருக்கு கரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது பாதுகாவலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமைச்சர் அவாத், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இப்பணியில் ஈடுபட்டுள்ள மற்ற அமைச்சர்களுக்கும் கரோனா குறித்த பயத்தை அதிகரித்துள்ளது.