இந்தியாவில் கரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்ட்ரா, முகக்கவசத்திற்கு விடை கொடுக்க முடிவெடுத்துள்ளது. மாநிலத்தில் கரோனா பரவல் குறைந்ததையடுத்து அம்மாநில அரசு, முகக்கவசத்திற்கு விடை கொடுப்பது குறித்து ஆலோசிக்க தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், “சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகாராஷ்ட்ராவை முகக்கவசம் இல்லாத மாநிலமாக மாற்றுவது குறித்து ஆலோசித்தோம். இங்கிலாந்து போன்ற சில நாடுகள், முகக்கவசம் அணிவதை நிறுத்துமாறு தங்கள் குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளன. அவர்கள் அதை எவ்வாறு சாதித்தார்கள் என்பது குறித்த தகவல்களை எங்களுக்கு வழங்குமாறு மத்திய மற்றும் மாநில பணிக்குழுக்களைக் கோரியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் மகாராஷ்ட்ராவின் அதிகளவிலான மக்கள் தொகை காரணமாக, முகக்கவச விதிமுறை சில காலத்திற்கு தொடரும் எனவும் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.