அமைச்சர் ஒருவரின் செல்போனுக்கு அழைப்பு விடுத்து லோன் கட்ட சொல்லி டார்ச்சர் செய்த லோன் ஆப் கும்பலை போலீசார் அலேக்காக கைது சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் காக்காணி கோவர்தன் ரெட்டி. ஆந்திராவின் விவசாயத்துறை அமைச்சராக இருக்கும் காக்காணி கோவர்தன் ரெட்டியின் பிஏ விற்கு கால் செய்த மர்ம நபர் லோன் ஆப்பில் இருந்து பேசுவதாகவும், அசோக் என்ற நபர் உங்களுடைய ஆப்பை பயன்படுத்தி எங்களிடம் 9 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார் எனக் கூறியுள்ளார். அதற்கு அமைச்சரின் பிஏ அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாது, அந்த பெயரில் லோன் வாங்குவதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் 25 ஆயிரம் தவணையை உடனடியாக கட்டுமாறு அமைச்சரின் பிஏ-விடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் பிஏ இதுகுறித்து அமைச்சர் காக்காணி கோவர்தன் ரெட்டியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நெல்லூர் காவல் நிலையத்தில் அமைச்சர் புகார் அளித்தார். அமைச்சர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் மர்ம நபரின் செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்து சென்னை அருகே திருமங்கலத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த லோன் ஆப் கும்பலைக் கூண்டோடு கைது செய்தனர்.