இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சியை மத்திய பா.ஜ.க. அரசு தனியாரிடம் விற்பனை செய்வதைத் தடுத்து அதைப் பாதுகாக்கக் கோரி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் இந்தியா முழுக்க எல்.ஐ.சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் காளைமாட்டு சிலை அருகே 14 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதற்குத் தலைமை வகித்த கோவை மண்டல எல்ஐசி முகவர்கள் சங்கத் தலைவர் குமணன் நம்மிடம் கூறும்போது, "இந்தியா முழுவதும் 13 லட்சம் முகவர்கள் எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மொத்த காப்பீடு வர்த்தகத்தில் எல்ஐசியின் பங்கு மட்டும் 70 சதவீதம் உள்ளது. எல்ஐசியின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு அதன் முகவர்களான எங்கள் உழைப்புதான் காரணம்.
ஆனால் இன்சூரன்ஸ் ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐர்.டி.ஏ), பீமா சுகம் என்ற புதிய கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி, மக்கள் ஆன்லைன் மூலமே காப்பீடு பெறலாம். எல்ஐசி முகவர் இனி எந்த தனியார் நிறுவனத்தின் சார்பாகவும் பணியாற்றலாம். இதன் மூலம் ஒரு முகவரிடம் பாலிசி பெற்று பிறகு வேறு முகவரிடம் சேவை பெறலாம் என்பன போன்ற பல்வேறு கொள்கைகளை இந்த ஆணையம் வகுத்துள்ளது.
தற்பொழுது பாலிசிதாரர்களுக்கு முகவர்கள் சிறப்பான சேவை புரிந்து வருகின்றனர். உதாரணத்திற்கு இறப்பு ஏற்படும்போது அலுவலகத்தை அணுகி இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருகின்றனர். ஆன்லைன் மூலம் பாலிசி பெற்ற பெரும்பாலானோர் உரிய சேவை பெற முடியாது. எல்ஐசி முகவர் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்காகப் பணிபுரிந்தால் அந்நிறுவனங்கள் முகவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை கொடுக்கும். ஆனால், நாளடைவில் எல்ஐசியின் வர்த்தகம் குறையும். எனவே இந்த பீமா சுகம் என்ற கொள்கை எல்ஐசிஐ நசுக்கவே பயன்படும். எவ்வாறு பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது தனியார் நிறுவனங்களின் தாக்கத்தாலும் அரசின் ஒத்துழைப்பின்மையாலும் நலிவுற்றுள்ளதோ அதுபோல எல்ஐசியும் எதிர்காலத்தில் நலிவுறும்.
அதனால் கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். எல்ஐசி மூலம் நாட்டின் வளர்ச்சிக்குக் கிடைக்கும் நிதி முழுமையாகப் பாதிக்கப்படும். எனவே மத்திய பா.ஜ.க. அரசு அந்தக் கொள்கையை உடனே வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியே வருகிற 30ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஆர்.டி.ஏ. அலுவலகம் முன்பு எங்களது முகவர்கள் சங்கம் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்பிகளுக்கும் இவை சம்பந்தமாக விரிவான கடிதம் கொடுத்துள்ளோம். வரும் 16ஆம் தேதி முதல் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதி கொடுத்துள்ளார்கள்.
ஏற்கனவே எல்ஐசி யின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டன. இரண்டு லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும் என்றார்கள் அதையும் குறைத்து ரூபாய் 20 ஆயிரம் கோடிக்குப் பங்குகளை விற்றார்கள். முதலில் ஒரு பங்கு ரூபாய் 5000 என்றார்கள் பிறகு ரூபாய் 940 க்கு விற்றார்கள். அந்த பங்கின் மதிப்பு தற்போது வெகுவாக சரிந்து ரூபாய் 600 என்ற நிலையில் உள்ளது. எல்.ஐ.சி. யில் ப்ரீமியம் மீது கூட நாலரை சதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. பாலிசிதாரர்கள் கடன் வாங்கினால் ஒன்பது சதவீதம் வட்டி. அந்த வட்டியின் மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இவை எல்லாம் பாலிசிதாரர்களான பொதுமக்களை நேரடியாக பாதிக்கிறது கடந்த மாதம் 20ஆம் தேதி பீமா சுகம் கொள்கையை அரசு அமலாக்கத் திட்டமிட்டது. எங்கள் போராட்டம் காரணமாக அதை ஒத்தி வைத்துள்ளார்கள். பாலிசிதாரர்களின் நலன் கருதி நிரந்தரமாக அக்கொள்கையை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறோம்" என்றார்.