மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் 63 சதவிகிதம் செயலிழந்ததை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் (71), கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தற்போது சிறையில் இருந்துவரும் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவரது சிறுநீரகம் 63 சதவீதம் செயலிழந்துவிட்டதாக கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது சிறுநீரகத்தின் பெரும்பான்மை பகுதி செயலிழந்துள்ள அதே நேரத்தில் அவரது ரத்தத்திலும் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரத்த அழுத்தமும் அதிகமாக இருப்பதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.