
கேரளாவை உறைய வைத்த பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது வேறு வகையான பயங்கர ரூட்டில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.
வயிற்றுப் பாட்டிற்காக லாட்டரி விற்றுக் கொண்டிருந்த ரோஸ்லினும், பத்மாவும் செல்வம் பெருகும் என்ற மாந்திரீக வார்த்தைகளால் அடுத்தடுத்து நரபலி கொடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலான பிறகே படுபயங்கரச் சம்பவம் வெளியே வந்து கேரளாவை மட்டுமின்றி தேசத்தையே உலுக்கியிருக்கிறது. இந்த கால இடைவெளிக்குள் நரபலி கொடுக்கப்பட்டதில் தொடர்புடையவைகளில் பல்வேறு சம்பவங்கள், கைமாறல்கள் நடப்பதற்கும் போதிய அவகாசமிருக்கின்றன என்று உறுதியாக சந்தேகிக்கிறது கஸ்டடி விசாரணை டீம்.
அக்டோபர் இரண்டாம் வாரம் வெளிப்பட்ட நரபலி பயங்கரத்தின் ப்ரைம் அக்யூஸ்ட் முகம்மது ஷாபி, பகவல் சிங், மற்றும் லைலா மூன்று குற்றவாளிகளிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும், மேலும் காணாமல் போனவர்களின் சார்ட்டும் உள்ளன. அவைகள் தொடர்பாக குற்றவாளிகளிடம் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்காக 12 நாட்கள் கஸ்டடி வேண்டும் என்று பத்தனம்திட்டா டி.சி.பி.யான சசிதரன் நீதிமன்றத்தில் கேட்டபோது மறுப்பேதும் தெரிவிக்காமல் குற்றாவாளிகளை 12 நாட்கள் போலீசாரின் கஸ்டடிக்கு அனுப்பியது நீதிமன்றம்.
குற்றவாளிகள் மூன்று பேரும் பத்தனம்திட்டா பகுதியில் தனியேயுள்ள கடவந்திரா காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு டி.சி.பி. சசிதரனின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்று பேர்களும் தனித்தனியான இடங்களில் வைத்து விசாரிக்கப்படுகிறார்கள். தேவைப்பட்டால் மட்டுமே அவர்கள் மூவரையும் ஒன்றாகவும் வைத்து விசாரணைத் தகவலை உறுதிசெய்து கொள்கிறார்களாம் டி.சி.பி.யின் தனிப்படையினர்.

அவர்களைக் கஸ்டடிக்குள் கொண்டு வந்த அன்றே பகவல்சிங்கின் வீட்டில் நரபலி கொடுக்கப்பட்ட அறை உள்ளிட்ட பிற அறைகளையும் தடயவியல் துறையினரின் உதவியுடன் தடயங்கள் மற்றும் ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர். நரபலி பூஜை அறை முழுக்க சிதறப்பட்ட ரத்தக் கறைகள், கட்டில்கள், பிரிட்ஜ்களில் உள்ள ரத்தக் கறைகள் போன்ற அனைத்தையும் சேகரித்த தடயவியல் துறையினர், ரத்தம் தோய்ந்த கத்தி, சுத்தி, அரிவாள், மண்வெட்டி மற்றும் கட்டிங் பிளேயர் உள்ளிட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியிருக்கிறார்களாம். சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் யாருடையது என்று பின்னர் டி.என்.ஏ. பகுப்பாய்வு செய்யப்படுமாம். மேலும் அங்கு கிடைத்த ஆயுதங்கள் நரபலி தரப்பட்ட இரண்டு பெண்களையும் வெட்டுவதற்கும் உறுப்புகளை கட் பண்ணி எடுக்கவும் சதைப் பிண்டங்களைப் புதைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டவையாம்.
பிரிட்ஜ்ஜிலிருந்து எடுக்கப்பட்ட பாத்திரம் மற்றும் பிரிட்ஜ் பகுதியில் காணப்பட்ட ரத்தம் போன்றவைகளை லைலாவிடம் காட்டி எப்படி வந்தது என விசாரணை நடத்திய போலீசாருக்கு நெருக்கடி வைக்காமல் நடந்தவைகளை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் லைலா.
பலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடலிலிருந்து 10 கிலோ சதையை வெட்டி எடுத்த முகம்மது ஷாபி. அதனை தண்ணீரில் வேகவைத்து பதப்படுத்துவதற்காக பிரிட்ஜ்ஜில் வைத்தவர், உயிர் பலி கொடுத்ததின் முழு பலனை அடைய வேண்டுமென்றால் இந்த நரமாமிசத்தை இரண்டு பேரும் சமைத்துச் சாப்பிட வேண்டும் அப்போதுதான் பலியின் முழு பலன் கிடைப்பதோடு செல்வம் பெருகும் என்று சொன்னார் ஷாபி. யோசித்த நாங்கள் அதில் கொஞ்சம் மசாலா தடவி சமைத்துச் சாப்பிட்டோம். மீதியைப் புதைத்து விட்டதாகச் சொல்லியிருக்கிறாராம் லைலா.
தொடர்ந்து புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பெண்களின் சதைத் துண்டுகளைப் பத்தனம்திட்டா டாக்டர்களின் உதவியோடு சோதனை செய்ததில் இரண்டு பெண்களின் இதயம், கிட்னி, கல்லீரல் (லிவர்) போன்ற முக்கிய உறுப்புகள் மட்டும் காணப்படவில்லையாம். மற்ற உறுப்புகள் அனைத்துமிருக்க முக்கியமான இந்த ஆர்கன்ஸ்களான உறுப்புகள் வேறெங்கும் உள்ளதா? அல்லது அழுகிப் போனதா என டாக்டர்கள் அலசியதில் எந்த விதமான அடையாளங்களும் தென்படவில்லையாம். வீட்டின் பின்புறத்தின் முழுப் பகுதியையும் மோப்ப நாயின் மூலம் இந்த உடலுறுப்புகளைத் தேடியும் கிடைக்கவில்லையாம். இதையடுத்தே இரண்டு பெண்களின் முக்கியமான இதயம், கிட்னி, கல்லீரல் என்னவானது, எங்கே போனது என்ற பலமான சந்தேகம் கிளம்பியிருக்கிறது. ஒரு வேளை நரபலி என்ற பெயரில் இந்த முக்கியமான உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளனவா. பணத்திற்காக விற்கப்பட்டுள்ளனவா என தீவிரமாக சந்தேகிக்கின்றதாம் விசாரணை டீம். அது மட்டுமல்ல இந்த உறுப்புகள் காணாமல் போனது அவர்களை அதிர வைத்ததுடன் நரபலியில் வியாபார நோக்கம் உள்ளதா என்ற கோணத்தில் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலாவிடமும் விசாரணையை நெருக்கியிருக்கிறார்கள்.
வாய் திறந்த லைலா, பெண்களின் உடல் பாகங்களை ஷாபி தான் துண்டு துண்டாக வெட்டியெடுத்தார். அதற்கு நான் உதவி செய்தேன். புதுசா உடல் சதைகளை வெட்டுபவர்களுக்கு தடுமாற்றமிருக்கும். வெட்டுவதற்கு நேரம் பிடிக்கும் ஆனா முகம்மது ஷாபி, கத்தி, அரிவாள், கட்டிங் பிளேயர் கொண்டு சதைத் துண்டுகளை மளமளன்னு வெட்டினார். உடலுறுப்புகளைத் தேடி கட் பண்ணி எடுப்பதில் ஏற்கனவே பழக்கப்பட்டவர்போல தெரியுதேன்னு அப்பவே நான் சந்தேகப்பட்டேன். ஆனா காட்டிக்கலை. ஒவ்வொரு பார்ட்டா வெட்டியெடுத்து பாத்திரத்தில வைத்தார். அது என்ன உறுப்புகள்னு எனக்குத் தெரியாது. வெட்டி முடிச்சப்ப, பெங்களுரூவில எனக்குத் தெரிஞ்சவங்க மந்திரவாதிக இருக்காங்க. அவங்க கிட்ட இந்த நரமாமிசத்த வித்தா 20 லட்சம் கிடைக்கும்னு சொன்னார் ஷாபி. அப்புறமா அது என்னாச்சு புதைக்கப்பட்டுச்சான்னு எனக்குத் தெரியாது என்ற பயங்கரத்தை வெளிப்படுத்திய லைலா, நரபலி பூஜையின் பலாபலன்கள் முழுமையாக உங்களுக்குக் கிடைக்க வேண்டுமானால், யாக பூஜை நடத்திய என்னுடைய முழுமையான சக்தி உனக்குக் கிடைக்கணும், அப்பதான் நரபலி பூஜை முழுசா முடியும். வீட்டில் செல்வம் பெருகும். அந்தப் பலா பலனை அடைய நீ, என்னோடு சேரணும் என சொன்ன மந்திரவாதி ஷாபி, பூஜை அறையில் கணவன் முன்னாலேயே என்னிடம் உடலுறவு வைத்துக்கொண்டார் என்பதையும் லைலா வெளிப்படுத்தியது விசாரணை டீமை திகைக்க வைத்துவிட்டதாம்.
நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் முக்கிய உடலுறுப்புகள் காணாமல் போனதால் சம்பவத்தின் விசாரணை வேறு கோணத்தில் தீவிரமாகியிருக்கிறதாம். அவைகள் வெட்டி எடுக்கப்பட்ட டெக்னிக் விசாரணை டீமை யோசிக்க வைக்க, அதன் பிறகே முகம்மது ஷாபியின் பழைய பயோ டேட்டாக்களை துருவியிருக்கிறது தனிப்படை.
பத்தனம்திட்டா நகரின் மருத்துவமனை ஒன்றின் மார்ச்சுவரியில் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக உடல்களைக் கொண்டு வருகிறபோது உடற்கூறாய்விற்காக உடல்களை அதன் பாகங்களை வெட்டியெடுக்கிற மார்ச்சுவரி ஸ்டாப்பாக சில காலம் பணிபுரிந்த ஷாபி, அதன் பிறகே மாந்திரீக ரூட்டில் திரும்பியிருக்கிறாராம். அந்த அனுபவம் காரணமாகவே அத்தனை எளிதாய் மனித உடலை வெட்டியும் உறுப்புகளை அகற்றவும் முடிந்திருக்கிறதாம்.
தவிர, நரபலி தரப்பட்ட இரண்டு பெண்களின் முக்கிய உடலுறுப்புகளான இதயம், கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட ஆர்கன்ஸ்கள் பெங்களுரூவில் வியாபாரமாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தில் இருக்கிறதாம் தனிப்படை.