மைக்ரோசாஃப்ட் மொழிபெயர்ப்புச் செயலியில் கூடுதலாக இந்திய மொழியான அஸ்ஸாமி இணைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது மொழிபெயர்ப்புச் சேவையை தன்னுடைய மைக்ரோசாஃப்ட் ட்ரான்ஸ்லேட்டர் செயலி மூலம் வழங்கி வருகிறது. இதில், பல்வேறு உலகமொழிகளை மொழிபெயர்க்கும் வசதி உள்ளது. இந்திய மொழிகளில் தமிழ், பெங்காலி, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது, குஜராத்தி ஆகிய 11 மொழிகள் இருந்துவந்தன. இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி கூடுதலாக அஸ்ஸாமி மொழியையும் பயன்படுத்தலாம். அஸ்ஸாமி மொழியானது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பேசப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முயற்சியானது தற்போது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
இது குறித்து மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மொழித் தடையை உடைக்க வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கம். ஏற்கனவே உள்ள 11 இந்திய மொழிகளின் பட்டியலோடு கூடுதலாக அஸ்ஸாமி மொழியையும் இணைத்ததில் மகிழ்ச்சி" எனக் கூறப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் ட்ரான்ஸ்லேட்டர் செயலியில் மட்டுமில்லாது, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் பிற சேவைகளிலும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.