கேரள மாநிலம் கரவாம் வஞ்சியூர் என்ற பகுதியைச் சேர்ந்த பினீஷ் குமார் - ரஜினி ஆகியோரின் மகன் சாரங்க். இவர் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இது மட்டுமின்றி கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சாரங்க், கேரளா பிளாஸ்டர்ஸ் என்ற கால்பந்து அணி சார்பில் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வந்துள்ளார். இந்த வருடம் தனது 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி அவரது தாயுடன் ஆட்டோவில் பயணித்த போது திருவனந்தபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த சாரங்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி காலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சாரங்கின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதித்தனர். இதையடுத்து சாரங்கின் உறுப்புகளான கண்கள் மற்றும் கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. இவரிடம் இருந்து பெறப்பட்ட இதயமானது கோட்டயத்தை சேர்ந்த ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இது போன்று மற்ற 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த செயல் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சாரங்கின் உடல் அவர் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சாரங்கின் உடலிற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் சாரங்க் அனைத்து பாடத்திலும் ஏ பிளஸ் கிரேடு எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளி வருவதற்கு முன்னதாகவே மாணவர் சாரங்க் உயிரிழந்த சம்பவம் கேரள மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவை கேரள மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டி வெளியிட்டார். அப்போது அவர் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவன் சாரங்க் பற்றி பேசும் போது, "மாணவன் சாரங்க் அனைத்து படங்களிலும் ஏ பிளஸ் கிரேட் பெற்று முதல் நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளார். விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மாணவனின் பெற்றோர் அந்த துக்கமான சமயத்திலும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்ததை கண்டு நெகிழ்ந்து போனேன். பெற்றோரின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்" எனப் பேசிக்கொண்டு இருக்கும் போதே கண்கலங்கிய சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.