முதியவர் ஒருவரின் சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் ஒன்று வெடித்த சம்பவம் கேரள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மரோட்டிசல் என்ற பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற 76 வயது முதியவர் ஒருவர் கடைக்காரரிடம் டீ வேண்டும் என்று சொல்லிவிட்டு கடையில் இருந்து பன் ஒன்றை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உடனடியாக எழுந்த அந்த முதியவரிடம் அங்கு இருந்த கடைக்காரர் ஓடி வந்து அவரது சட்டைப்பையில் இருந்த செல்போனை எடுத்து கீழே போட்டார். அதனைத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த செல்போனை கடைக்காரர் தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் முதியவர் உயிர் தப்பினார்.
செல்போன் வெடித்த சம்பவம் குறித்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் தற்போது பரவி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் ஒரே மாதத்தில் நடந்த 3வது சம்பவம் இதுவாகும். கடந்த மாதம் 24 ஆம் தேதி இதே திருச்சூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் செல்போன் வெடித்து உயிரிழந்தார். அதேபோல் கோழிக்கோட்டை சேர்ந்த ஹரிஷ் ரகுமான் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து காயமடைந்தார். கேரளாவில் தொடர்ந்து செல்போன்கள் வெடிக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.