கரோனாவால் இனிமேல் யாரும் புதிதாகப் பாதிக்கப்படாமல் இருந்தால் ஏப்ரல் ஏழாம் தேதியோடு தெலங்கானா மாநிலம் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிடும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர், 33,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 194 பேரும், மகாராஷ்டிராவில் 193 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ள சூழலில், இதிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் கரோனா பரவல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், "மாநிலம் முழுவதும் தேவையான அனைத்து நோயறிதல் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெலங்கானாவில் கரோனா பாதிக்கப்பட்டு 58 பேர் சிகிச்சையில் உள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வந்த 25,937 பேர் அரசாங்கத்தின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் நிறைவடையும். எனவே, இதன்பிறகு புதிதாக யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றால் ஏப்ரல் 7க்கு பின்னர் தெலங்கானா கரோனா இல்லாத மாநிலமாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.