ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகரில், திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வரும் அரசு நிர்வாகம் சார்ந்த மூன்று நாள் தேசிய பயிலரங்கத்தின் தொடக்க உரையில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவதில் எதிர்க்கட்சியினர் சிலர் மாறுபட்ட கருத்துக்களைக் கூறிவருவதை சுட்டிக்காட்டி பேசினார்.
நகர்ப்புறங்களில் வாழும் நிலம் இல்லாத மக்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்துடன் ஜூன் 2015 இல் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2,711 நிலமற்ற குடும்பங்களுக்கு தலா 5 மார்லாக்கள் (1,360 சதுர அடி) நிலத்தை வழங்குவதாக ஜூலை மாதம் ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சிகள், ஜம்மூ காஷ்மீரை சேராத மக்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதாக கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, “இந்த அறிவிப்பு யூனியன் பிரதேசத்தில் வெளிநபர்கள் எதிர்க்கட்சியினரின் குடியிருப்புகளில் குடியமர்த்தப்படுவார்களோ என்ற அச்சத்தையும், வீடற்ற நபர்களுக்கு வீடு வழங்கும் பெயரில், ஜம்மு காஷ்மீரில் சேரிகள் மற்றும் வறுமையை உருவாக்க நினைப்பதாக தோன்றுகிறது. இது மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பையும் மாற்றும்” என தெரிவித்தார்.
அதேபோல், முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா, “ஆகஸ்ட் 2019ல் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் குடி வந்தவர்களும் வீடற்றவர்களாகக் கணக்கிடப்படும் சூழல் உண்டாகும். 2019 க்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு குடி வந்தவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு பயனடைய வாய்ப்பு உள்ளது” என தனது அச்சத்தைத் தெரிவித்தார்.
இதற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, திங்கள் கிழமை நடைபெற்ற தேசிய பயிலரங்கம் நிகழ்ச்சியில் பதில் அளித்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர், “1990 ஆம் ஆண்டு முதல் காஷ்மீரில் 50,000 பேரை இழந்ததற்கு இப்போது இத்திட்டத்தை விமர்சிப்பவர்கள் தான் காரணம். காஷ்மீரில் நிலவும் அமைதியை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மேலும் இவர்கள் வீதி வன்முறைகள், கல்வி நிறுவனங்களை இயங்க விடாமல் செய்வது போன்றவற்றிற்காக மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். ஜம்முவின் குடியுரிமையுள்ள மக்களைத் தவிர ஒருவருக்கு கூட இத்திட்டத்தின் கீழ் நிலம், வீடு வழங்கப்படவில்லை.
வெளிமாநிலத்தவருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என இங்கிருக்கும் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் கூட கேட்டு அறியலாம். இது தொடர்பாக பகிரப்படும் அனைத்து கருத்துகளும் வதந்திகளும், ஜம்முவில் அமைதி நிலவுவதை குலைப்பதற்காக சில நபர்களால் செய்யப்பட்டவை. காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து தான் சிறந்த மாற்றங்கள் நடந்துள்ளன. இந்த நான்கு ஆண்டுகளில், வழக்கமாக நிகழும் வீதி வன்முறைகள் முடிவுக்கு வந்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆண்டு முழுவதும் இயங்குகிறது. இரவு 10 மணிக்குப் பிறகும் உணவகங்கள் இயங்கி வருகிறது. மக்களும் இரவு நேரங்களில் முன்புபோல் இல்லாமல் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்” என்றார்.