உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இன்று (19/11/2022) மதியம் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி., "காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் விழாவை எண்ணி வியந்து மகிழ்கிறேன். வாரணாசியில் பாரதியார் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். காசியில் தமிழ் சங்கமம் நடைபெற யோசனை செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி" என்றார். அதைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, "நான் கடவுள்" திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஹர ஹர மகாதேவ்’ பாடலை பிரதமர் ரசித்துக் கேட்டார்.
நிகழ்ச்சியில் "வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு" என்று கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, "காசியும், தமிழ்நாடும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது. காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் நீண்ட பந்தம் உள்ளது. காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகமாக உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே சாட்சி. காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழகத்திற்கு திருவள்ளுவர்" என்றார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து நடத்தும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.