ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்று கொண்ட நாள் முதல் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக ஆந்திர போலீசாருக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க வேண்டுமென்ற திட்டத்தை கொண்டு வர முதல்வர் ஜெகன் முடிவு செய்து, அது குறித்து ஆராய காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு காவல்துறை விடுமுறை குறித்த அறிக்கையை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தாக்கல் செய்தது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மாநில டிஜிபி, காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்தார். இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் மூலம் மொத்தம் 19 வகையான மாடல் விடுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதியில் உள்ள யூனிட் அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். யூனிட் அதிகாரிகள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப சில நாட்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த வார விடுமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்தார்.
அதே போல் ஆந்திர மாநில சுகாதார ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பரோசா என்ற திட்டத்தின் படி அனைத்து விவசாயிகளும் ஆண்டிற்கு 12,500 ரூபாய் வழங்கும் திட்டம், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படும் திட்டம் உள்ளிட்டவற்றிருக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒப்புதல் அளித்து, உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.