கடந்த சில நாட்களாக கரோனா தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. தினமும் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அரசு இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொதுமக்களிடம் தொடர்ந்து எடுத்துக்கூறியும் சிலர் அதனை செய்ய மறுக்கிறார்கள். மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு கூறியும், பாதிக்கும் மேற்பட்டவர்கள் மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றி வருகிறார்கள். இந்நிலையில் மாஸ்க் அணியாமல் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உ.பி. மாநிலம், கான்பூரை சேர்ந்த ஒருவருடைய ஆட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஆடு மாஸ்க் அணியாமல் இருந்ததால் அதனை காவல்துறையினர் கைது செய்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆட்டின் உரிமையாளர் மாஸ்க் அணியாததால், ஆட்டை காவல்நிலையம் கொண்டு சென்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.